மற்றொரு சிக்கலில் சிக்கிய திமுக அரசு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதில் இருந்து, மக்களுக்கு தேவையான பல்வேறு நல்ல திட்டங்களை, திமுக அரசு அமல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வளவு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அதற்கு ஏற்றாற்போல், பல்வேறு சர்ச்சைகளையும் இந்த அரசு சந்தித்து வருகிறது. சமீபத்தில், இலவச பேருந்து திட்டத்தை ஓசி என்று அமைச்சர் பொன்முடி கொச்சையாக பேசினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், டி.ஆர்.பாலு, தனது செருப்பை எடுத்து வரச் சொல்லி தொண்டர் ஒருவரிடம் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளில், திமுகவின் முக்கிய தலைவர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு விஷயம், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அண்ணா அறிவாலயத்தில் திமுக கட்சி தொடர்பான கூட்டம் நடைபெற்றால், அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. ஜெமினி மேம்பாலத்தில் ஆரம்பிக்கும் இந்த வாகன நெரிசல், நந்தனம் சிக்னல் வரை இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், திமுகவின் கூட்டங்கள் நடக்கும் நேரங்களில், அந்த வழியாக சென்றால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுமட்டுமின்றி, அண்ணா அறிவாலயத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள சாலைகள், மேடும் பள்ளமுமாக, மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு குறைகள், கடந்த 6 மாதங்களாக இருப்பதால், இதனை சரிசெய்து தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.