நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தின் பெரும்பாலான அணைகள், ஆறு, குளங்கள், குட்டைகள் நிரம்பி வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மண் சரிவு,மரங்கள் விழும் அபாயமும் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை தீவிரமடைந்த நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.அங்கு தொடரும் கனமழையால் 2-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூடலூர், குந்தா பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
மேலும் மழை பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அம்மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. “அடுத்த 24-மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என அறிவிப்பு வந்ததையடுத்து. மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது எனவும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.