ஒரு கொலை செய்துவிட்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யும் கதாபாத்திரங்களை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அது நிஜ வாழ்க்கையில் நடந்தது என்று சொன்னால், உங்களால் நம்ப முடியுமா?.
ஆம், தொழில் அதிபர் ஒருவரை கொன்ற குற்றவாளி, காவல்துறையிடம் இருந்து தப்பிக்க கற்பனைக்கு அப்பாற்பட்ட முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
கடந்த 2004-ஆம் ஆண்டு அன்று, தானியங்களை விற்பனை செய்து செய்து வந்த ரமேஷ் குப்தா என்ற தொழில் அதிபர் கடத்தப்பட்டிருந்தார். இவரை கடத்திய கும்பல், பணத்தை கேட்டு, அவரது குடும்பத்தினரை மிரட்டியிருந்தனர்.
இறுதியில், இந்த கும்பல், ரமேஷ் குப்தாவை கொலை செய்துவிட்டு, அவரது உடலை கால்வாய் ஒன்றில் வீசிவிட்டு, தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அனைத்து குற்றவாளிகளையும் பிடித்துவிட்டனர்.
இருப்பினும், இந்த கூட்டத்தின் தலைவன் என்று கூறப்படும் சிபாஹி லால், காவல்துறையிடம் இருந்து தப்பித்துள்ளான். 20 வருடங்களாக தேடியும் சிக்காத இவர், தனது பெயரை குர்தயாள் என்று மாற்றிக் கொண்டு, உத்தரபிரதேச மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு, மனிப்பூரி என்ற பகுதியில், உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், சோலா பூரியை அவர் விற்பனை செய்து வந்துள்ளார். அந்த கடையும் அப்பகுதியில், மிகவும் பிரபலமாக மாறியுள்ளது.
ஆனால், பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப, லால் தற்போது காவல்துறையிடம் சிக்கியுள்ளார். அதாவது, இந்த பகுதியில் இருப்பதை விசாரணையின் மூலம் கண்டறிந்த காவல்துறையினர், ராம்லீலா மைதான் என்ற பகுதியில் அவரை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய துணை காவல் ஆணையர் ராகேஷ் பவாரியா, “ஷாலிமர் பாக் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த கொலை வழக்கில், லால் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார்.
இவர், கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து, காவல்துறையிடம் சிக்காமல் இருந்தார். தற்போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகேஷ் பவாரியா, “அந்த கும்பல், ரமேஷ் குப்தாவுக்கு மயக்கம் மருந்து கொடுத்தது மட்டுமின்றி, கத்தியை வைத்து அவரை கொலை செய்தனர். அவர் உயிரிழந்த பிறகும், அந்த உடலில் கத்தியை வைத்து பலமுறை குத்தியுள்ளனர்.
அதன்பிறகு, உடலை கோணியில் மூட்டைக்கட்டி, கரலா என்ற கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்” என்று கூறினார்.