எல்.கே.ஜி முதல் 2 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகள், பாதுகாப்பு காரணங்களுக்காக கீழ்தளங்களில் தான் பொதுவாக அமைக்கப்படும். ஆனால், சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்த வித்யாலயா பள்ளியில், 2 மற்றும் 3-வது மாடியில் தான் 1-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறைகள் உள்ளது.
மேலும், கழிவறை தரைதளத்தில் உள்ளதால், 1-ஆம் வகுப்பு மாணவர்கள் கீழே வரவேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில், 1-ஆம் வகுப்பு மாணவர்கள் கீழே வரும்போது, காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், அந்த பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சித்திம்மா, நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, தவறி கீழே விழுந்த அவர், தொடை எலும்பு இரண்டு துண்டாக உடைந்து படுகாயம் அடைந்துள்ளார். 6 மாதத்திற்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பெற்றோர்கள் விசாரித்தபோது, பள்ளி தரப்பில் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
மேலும், பள்ளியின் சிசிடிவி காட்சிகள் குறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு, “ஒயரை எலி கடித்ததால், சிசிடிவி வேலை செய்யவில்லை” என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் சார்பில் பேசிய ஒருவர், அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி, அந்த பெற்றோரை மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“ஒரு வருஷம் சீக்கிரம் ஓடிடும். குழந்தைக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆயிரம் குழந்தைகள் படிக்குற இடத்துல, ஒண்ணு ரெண்டு பேருக்கு இப்படி நடக்க தான் செய்யும்” என்று ஆணவத்துடன் அவர் பேசியுள்ளார். “குழந்தையை தனியாக எப்படி கழிவறைக்கு அனுப்பினீர்கள்” என்று மாணவியின் தந்தை கேட்டதற்கு, “துணைக்கு இன்னொரு 5 வயது குழந்தையை அனுப்பினேன்” என்று பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பேசியுள்ளார்.
“ஆயம்மாவை கூடவா மாணவிக்கு துணையாக அனுப்ப மாட்டீர்களா” என்று திரும்பி கேட்டதற்கு, “எத்தனை ஆயம்மாவை வைத்திருக்க முடியும் சார்” என்று சாதாரணமாக அந்த ஆசிரியர் கூறியுள்ளார். இந்த அளவிற்கு பள்ளி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாணவி காயம் அடைந்தபோது, முறையாக முதலுதவி அளிக்காமலும், பைக்கிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பாதிப்பை இன்னும் தீவிரமாக்கியுள்ளனர். எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபகாலமாக, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட, ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளியின் வளாகத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.