சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை அதிகமாக இருந்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இன்று அதிகாலையில் இருந்து துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமட்டு பறந்தன. ஆனால் வானிலை சீரடையாததால் பின்பு 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், ஃபிராங்க்ஃபுர்ட், துபாய், லண்டன், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் 3 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையால், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெரிவித்தனர்.