மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம்தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்..
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் வேலை நிறுத்த போராட்டம் தீர்மானம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் : தமிழக முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கிற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கணக்கில் இருக்கிறது. ஆனால் அது முழுமையாக இயக்கப்படவில்லை. வார விடுமுறை நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிட்க்கு பின்பு நூற்றுக்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சேவையில் இல்லாமால் அகற்றப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ்களை தங்கு தடை இன்றி இயக்குவதற்கும்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சட்டப்படியான எட்டு மணிநேர வேலை வாய்ப்பினை வழங்க வலியுறுத்தியும், தனியார் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
அதே போல ஜனவரி 3ஆம் தேதி மாநில முழுவதும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.