மன்னார்குடியில் தி.மு.க கவுன்சிலர் ஒருவரின் வீட்டில் போலீஸார் 140 கிலோ குட்கா மற்றும் ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ஹரித்ராநிதி தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் மன்னார்குடி நகராட்சியில் 3வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருக்கிறார்.
இந்நிலையில் ஆவிக்கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றி சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 140 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா மற்றும் அவை விற்பனை செய்த பணம் ரூ. 4 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட குட்காவின் மதிப்பு 1 லட்சத்து 37,000 இருக்கும் என போலீஸார் கணக்கிட்டனர்.
இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் தி.மு.க கவுன்சிலர் சிவசங்கரிடமிருந்து குட்கா வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிவசங்கர் மற்றும் சேகர் இருவரையும் கைது செய்து மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர்.