முழு ஆண்டு தேர்வு முடிந்துவிட்டதால், மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை, விளையாடி, மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் 15 பேர், கூட்டாஞ்சோறு செய்து, விளையாடியுள்ளனர்.
சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு, அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, குழந்தைகள் அனைவருக்கும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு, கூட்டாஞ்சோறு சமைத்த விஷயத்தை குழந்தைகள் கூறியுள்ளனர்.
அதன்பிறகு தான், என்ன நடந்தது என்று பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. அதாவது, சமைப்பதற்கு எண்ணெய் தேவைப்பட்டதால், சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டில் தேடியுள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்து, எண்ணெய் என்று நினைத்த அவர், அதனை எடுத்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர், குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.