மிசோரமில் இன்று கட்டுமானப் பணியில் இருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். பாலம் இடிந்தபோது சுமார் 35 முதல் 40 கட்டுமான தொழிலாளர்கள் இருந்தனர். 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ள சைராங் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் மூத்த அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்கள் எனவும் ரெயில்வே துறை தெரிவித்து உள்ளது.
இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹ 50,000ம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.