17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 22- அன்று தொடங்கிய நிலையில் நேற்று 3-வது லீக் ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 208 ரன்கள் குவித்தது. சால்ட் 54 (40) ரன்களும், அதிரடியாக ஆடிய ஆந்த்ரே ரசல் 64 (25) ரன்களும் எடுத்தனர்.
ஐதராபாத் அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளும், மார்கண்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 209 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதரபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அகர்வால் 32 ரன்களிலும், அபிஷேக் 32 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அதன் பின்னர் வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களிலும், மார்க்ரம் 18 (13) ரன்களிலும் ஆட்டமிழக்க, ஹெய்ன்ரிச் கிளாசன் சரவெடியாய் வெடித்தார்.
சிக்ஸர்களை மட்டுமே பறக்கவிட்ட அவர் 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருக்கு துணையாக அப்துல் சமாத் 15, ஷாபாஸ் அகமது அதிரடி ஆட்டம் காட்டினர்.
கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே கிளாசன் சிக்ஸர் பறக்கவிட்டார்.
அடுத்த பந்தில் அவர் ஒரு ரன் எடுக்க, ஷாபாஸ் அகமது 16 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் யான்சென் ஒரு ரன் எடுத்தார். ஐந்தாவது பந்தில் கிளாசன் அவுட் ஆனார். அவர் 29 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியாக பேட் கம்மின்ஸ் கடைசி பந்தை எதிர்கொண்டபோது, ஹர்ஷித் ராணா டாட் பந்தாக வீச 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.
அந்த அணியின் தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், ரசல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ரசல் பெற்றார்.