காணாமல் போன 2 மாத குழந்தை.. பதறிய தாய்.. கடைசியில் தங்கைகளே கொன்ற கொடூரம்..

மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இந்த தம்பதிக்கு இன்னொரு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், கணவர் வேலைக்கு சென்றுவிட்டதால், வீட்டில் இருந்த சமையல் வேலையை மனைவி செய்து வந்துள்ளார்.

அப்போது, சகோதரிகள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். சமையல் வேலை அனைத்தையும் முடித்துவிட்டு, தனது குழந்தையை பார்ப்பதற்காக, அந்த பெண் சென்றுள்ளார். ஆனால், வீட்டில் எங்கு தேடியும், அந்த பச்சிளங்குழந்தையை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். ஆனால், எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால், வீட்டின் உள்ளே பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, வீட்டின் குளியலறையில் இருந்த வாளியில் பார்த்தபோது, 2 மாத பச்சிளங் குழந்தை, சடலமாக கிடைத்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு, வாளியில் படுக்க வைத்து குளிப்பாட்டியது தெரியவந்தது. எதற்காக இவ்வாறு செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பியதற்கு, “சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்த கரடி பொம்மையை, அம்மா இப்படி தான் துவைத்து காய வைத்தார்.

அதேபோல் தான், நாங்களும் வீட்டில் இருந்த குழந்தையை தண்ணீரில் துவைத்து காய வைக்க நினைத்தோம். ஆனால், வாளியில் அமர வைத்து குளிப்பாட்டிய பிறகு, குழந்தை எந்திரிக்கவில்லை. அதனால், குழந்தையை அப்படியே வைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டோம்.

அதன்பிறகு, குழந்தையை வாளியில் வைத்ததையே மறந்துவிட்டோம்” என்று கூறியுள்ளனர். சிறுமிகள் அறியாமல் செய்ததால் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.