புதுச்சேரி அருகே, சிறைக் கைதிகளை போராட்டத்திற்கு தூண்டிய இரண்டு பேர், மத்திய சிறையில் இருந்து ஏனாம் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு மத்திய சிறையில், கருணா என்ற கைதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு பரோல் கிடைத்தது. ஆனால், பரோலுக்கான நாட்கள் முடிந்தபோதும், சிறைக்கு திரும்பாத அவர், தப்பியோட முயற்சி செய்தார்.
இதையடுத்து, அவரை தேடி கண்டுபிடித்த காவல்துறையினர், மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பரோல் வழங்குவதில், கடுமையான நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால், பரோல் வழங்காத சிறை நிர்வாகத்தை கண்டித்து, தண்டனை கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கைதிகளை போராட்டத்திற்கு தூண்டிய மணிகண்டன், பெருமாள் சாமி ஆகிய இரண்டு பேரை, ஏனாம் சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, இரண்டு பேரும் இன்று காலை ஏனாம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.