சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளங்களில் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவும் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவும் அதிகரிக்கும் ரீல்ஸ் மோகத்தால் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகிறது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிபட்டது போல கட்டு போட்டுக்கொண்டு பிராங்க் வீடியோவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் செங்கோட்டையைச் சேர்ந்த பீர்முகமது (30) மற்றும் சேக் முகமது (27) இரு இளைஞர்களை தென்காசி காவல்துறையினர் கைது செய்து நோயாளிகள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு இடையூறாக செயல்பட்டதாகவும், வீடியோ எடுக்கும் பொழுது கேள்வி எழுப்பிய மருத்துவமனை அதிகாரியிடம் இளைஞர்கள் அவதூறாக பேசியதாக என இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொது இடங்களிலும் இம்மாதிரியான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் ரீல்ஸ் மோகத்தால் இரு இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.