2023ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டில் நடந்த உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
துருக்கி சிரியா நிலநடுக்கம்
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒடிசா ரயில் விபத்து
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே நடைபெற்ற தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உள்பட 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். காசா மீதான போரை உடனே நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா. மற்றும் பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் கண்டு கொள்ளவில்லை. தற்போது வரை இந்த போர் நீடித்து வருகிறது
நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த நவம்பர் 5 ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர். 375-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மணிப்பூர் கலவரம்
மெய்தேய் சமூகத்தினருக்கு அதிகாரப்பூர்வ பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.இந்த கலவரத்தில் இதுவரை குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர். கலவரத்தால் 60,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.