ஐபிஎல் 2024 தொடரின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதில் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா 2 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் ஆகியும் வெளியேறினர்.
ராகுல் திருப்பாதி 9 ரன்களில், மார்க்கரன் 20 ரன்களில் வெளியேறினார். நிதீஷ்குமார் ரெட்டி 13 ரன்களிலும் கிளாசன் 16 ரன்களிலும், சேபாஸ் அஹமத் 8 ரன்களிலும், அப்துல் சமத் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் பாட் கம்மின்ஸ் மட்டும் தனியாளாக போராடி 24 ரன்கள் சேர்த்தார்.
இதனை அடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களம் இறங்கியது.
தொடக்க வீரர் சுனில் நரைன் எதிர்கொண்ட முதல் பந்திலே சிக்ஸர் அடித்த நிலையில், இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார். பவர் பிளேவில் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் மூன்று சிக்சர், நான்கு பவுண்டரி என பட்டையை கிளப்பினார்.
இதன் மூலம் 24 பந்துகளில் வெங்கடேஷ் ஐயர் அரைசதத்தை பூர்த்தி செய்தார். குர்பாஷ் 39 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா அணி 10.3 வது ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் சேம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.