ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் 239 ஜெலட்டின் குச்சி வெடிபொருள் பறிமுதல் – ஒருவர் கைது

தொண்டி அருகே கடற்கரை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருளான 239 ஜெலட்டின் குச்சிகளை க்யூ பிரிவு மற்றும் கடலோர போலீசார் கைப்பற்றியுள்ளனர். ஒருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்பி பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாசிப்பட்டிணம் கடற்கரை அருகில் கடலில் வெடிவைத்து மீன் பிடிக்க பயன்படுத்தும் 239 ஜெலட்டின் குச்சிகளை க்யூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிவ் பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் இணைந்து தீவிரமாக சோதனையிட்ட போது கடலோர மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர்.

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரை தேடிவருகின்றனர்.