வயிற்று வலியால் துடித்த பெண்…ஆபரேஷன் செய்த டாக்டர்கள் ‘ஷாக்’

உத்தரபிரதேசம் மாநிலம் பெய்ரேலியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தமது 15 ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  எத்தனையோ தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தொடர் சிகிச்சை எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி பெய்ரேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பலகட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்தபோது ஒரு கணம் அனைவரும் அதிர்ந்தே போயிருக்கின்றனர்.

அதற்கு காரணம், அவரது வயிற்றில் இருந்து 2 கிலோ முடிதான். பண்டல், பண்டலாக இருந்த முடியை கொத்தாக அகற்றி இருக்கின்றனர். இந்த முடிதான் அந்த பெண்ணின் வயிற்று வலிக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறியதாவது : அந்த பெண்ணுக்கு அரிய உளவியல் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த பாதிப்புக்கு டிரைகோலோடோபேமனியா என்று பெயர். இதுபோன்ற பாதிப்பை உடையவர்கள் தன்னை அறியாமலே முடியை சாப்பிடுவார்கள். சிறுவயதில் இருந்தே இந்த பெண்ணுக்கு இத்தகைய பாதிப்பு இருந்திருக்கிறது.

அதுதான் தற்போது வயிற்று வலிக்கு காரணமாக அமைந்து இருக்கிறது. உரிய முறையில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளார். அவருக்கு விரைவில் உளவியல் சிகிச்சை தரப்பட உள்ளது என கூறியுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News