மேற்கு வங்கத்தில் அலிபூர்துவார் மாவட்ட வனப் பகுதியில் சரக்கு ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன.
இது தொடா்பாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டதாவது:
அலிப்பூா்துவாரில் இருந்து சிலிகுரிக்கு திங்கள்கிழமை காலை காலிப் பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ராஜாபகத்கவா வனப் பகுதியை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது, யானைக் கூட்டம் ரயில் தண்டவாளத்தை திடீரென கடந்து சென்றுள்ளது. இதில் 2 குட்டி யானைகளும் மற்றொரு யானையும் ரயில் மோதி உயிரிழந்தன.
வழக்கமாக யானைகள் கடந்து செல்லும் வனப் பகுதிகளில் ரயில்கள் ஓட்டுநா்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் தரும் தொழில்நுட்ப அமைப்பு இருக்கும். யானைகள் நடமாட்டம் ஏற்கெனவே கண்டறியப்பட்ட வன எல்லைகளில் இது செயல்படும். இதன் மூலம் ரயில் யானைகள் மீது மோதாமல் தவிர்க்கப்படும். ஆனால், இப்போது யானைகள் இறந்த இடம் அந்த முன்னெச்சரிக்கை தகவல் பகுதிக்குள் வரவில்லை.
மேலும், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வனப் பகுதிகளில் செல்லும் ரயில்கள் வன விலங்குகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறைவான வேகத்திலேயே இயக்கப்படும். இந்த விபத்து காலை 7.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.