தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை உயா்த்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மதுரை, நெல்லைக்கு ரூ.4,000 வரை வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனா்.
ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 15 வரை தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சிறப்பு ரயில்களில் முன்பதிவுகள் முடிந்து விட்டன. அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பி விட்டன. ஆம்னி பேருந்துகளிலும் 90% இருக்கைகள் நிரம்பி விட்டன. இந்த நிலையில் சொந்த ஊா்களுக்கு செல்பவா்கள் பணிகளை முடித்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வந்து குவிந்ததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் தங்கள் கட்டணத்தை 30% உயா்த்தியுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் உட்கார்ந்து பயணம் செய்ய ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலிக்கு படுக்கை வசதி ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தூக்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படும் விமான டிக்கெட் இப்போது ரூ.10,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கட்டண உயர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.