குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், பெண் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே வெளி உலகிற்கு தெரிய வருகிறது. ஆனால், அவர்களை காட்டிலும், ஆண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக, சில புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இருக்க, அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா செர்ரானோ. 31 வயதான இவர், தனது வீட்டின் அருகில் இருந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த சிறுவனிடம் நெருங்கிய ஆண்ட்ரியா, கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனை அறிந்த அந்த சிறுவனின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, இந்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையை குறைக்கும் முயற்சியில் அந்த பெண் தீவிரமாக இறங்கியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாக, அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் சமரசம் பேசி, தண்டனை குறைக்க அப்பெண் முயற்சித்து வருகிறாராம். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் மே மாதம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.