தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருநெல்வேலிகாவல் அருகே கீழதொரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு என்பவர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் சென்று சோதனை செய்த பொழுது 3200 கிலோ ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரிய வருகிறது. அதனையடுத்து 3,200 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து ராஜகுருவை கைது செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.
பின்னர் ராஜகுருவிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது ரேஷன் கடை மூலமாக அரிசி வாங்கி பயன்படுத்தாதவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி தீவனம் பண்ணைக்கும் கேரளா மாநிலத்திற்கும் அனுப்பி வருவது விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜகுரு சிறையில் அடைக்கப்பட்டார்.