3-வது டி20 சுருண்டது தென்னாப்பிரிக்கா: தொடரை சமன் செய்தது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 3வது டி20 போட்டியில் நேற்று விளையாடியது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 12 ஓட்டங்களிலும், திலக் வர்மா(0) ரன்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்கள்.

ஆனால் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் விளாசி இந்திய அணியின் ரன்கள் விகிதத்தை நிலைப்படுத்தினார்.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால், 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் விளாசி சதத்தை(100) பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

இதையடுத்து சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ரீசா ஹென்ரிக்ஸ் 8 ரன்களிலும், மத்தேயு ப்ரீட்ஸ்கே 4 ரன்களிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களும் யாரும் பெரிய அளவிலான ரன்களை குவிக்க தவறியதால் தென்னாப்பிரிக்க நிலை தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் தன்னுடைய பங்கிற்கு 35 ரன்கள் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்கள் முடிவிலேயே 95 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 3வது டி20 போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

மீதமுள்ள இரண்டு போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும், இந்தியா அணி ஒரு வெற்றியை பெற்று இருப்பதால் தொடர் சமனில் முடிந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News