மட்டன் உணவு சாப்பிட்ட 4 பேர் பலி; 2 பேருக்கு தீவிர சிகிச்சை!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிராவாரா பகுதி கல்லூர் கிராமத்தை சேர்ந்த பீமன் (60) என்பவர் ஆட்டிறைச்சி வாங்கிவந்து தனது குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் உள்ள ஆறு பேரும் சமைத்த உணவை சாப்பிட்டவுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே பீமன் மற்றும் அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்ட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.

இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த குடும்பத்தினர் சாப்பிட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கு காலாவதியான இறைச்சி காரணமா? அல்லது உணவில் வேறு ஏதேனும் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு பேரும் உடல் நலம் தேறி வாக்குமூலம் அளித்தால் மட்டுமே உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News