செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கானகோயில் பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர். 40 வயதாகும் இவர், தனியார் தொழிற்சாலைகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், இவரது செல்போன் எண்ணிற்கு அழைப்பு விடுத்த பெண் ஒருவர், தன்னை ரஞ்சிதா என்ற அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் உங்களை தெரியும் என்று கூறிய அவர், பாஸ்கருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இவர்களது நட்பு நாளடைவில் நெருக்கமாக மாறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி அன்று, பாஸ்கரும், ரஞ்சிதாவும், சிறுங்குன்றம் வனப்பகுதியில், தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர், பாஸ்கரிடம் இருந்த செல்போன், 28 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
மேலும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், இந்த பெண்ணுடன் ஒன்றாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த பாஸ்கர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், பணத்தை பறித்த 3 பேருக்கும், ரஞ்சிதாவிற்கும் ஏற்கனவே பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும், அந்த 3 பேரில் ஒருவரது காதலி தான் ரஞ்சிதா என்பதும், பாஸ்கரிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக தான், அவரிடம் ரஞ்சிதா பழகினார் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.