வெங்காய விலை உயர்வை தடுக்க ஏற்றுமதி மீது 40 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு உள்நாட்டுச் சந்தையில் வெங்காய விலை உயா்வைத் தடுக்கவும், விநியோகத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிக்கையில், ‘நடப்பாண்டு டிசம்பா் 31-ஆம் தேதிவரை, வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் வெங்காயம் விலை உயரக் கூடும் என்று தகவல்கள் வெளியான நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டுச் சந்தையில் விநியோகத்தை அதிகரிக்கும் வகையில், அரசின் கையிருப்பில் இருந்து 3 லட்சம் டன் வெங்காயம் விடுவிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
மத்திய நுகா்வோர் விவகாரங்கள் துறை அமைச்சக தரவுகளின்படி, நாட்டில் சனிக்கிழமை ஒரு கிலோ வெங்காயத்தின் சராசரி விலை ரூ.30.72. இதில் அதிகபட்ச, குறைந்தபட்ச விலைகள் முறையே ரூ.63, ரூ.10 ஆகும். தில்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.37-க்கு விற்பனையாகிறது.