ஐ.ஐ.டி மெட்ராஸில் படித்துள்ள 45 சதவீத மாணவர்களுக்கு, 2024-ஆம் ஆண்டில், வேலை கிடைக்காமல் போகலாம் என்று சமீபத்தில் வெளியான தகவலுக்கு, அந்த கல்வி நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள விளக்கத்தின்படி, “வேலைக்கு பணியமர்த்தப்படுதல் தொடர்ந்து நடந்துக் கொண்டே உள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உள்ளது.
ஒருசிலர், உயர் படிப்புக்கு முயற்சி செய்கிறார்கள். ஒருசிலர், தங்களது சொந்த நிறுவனத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
ஒருசிலர், சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத முடிவு செய்துள்ளார்கள். பட்டமளிப்பு விழா முடிந்து, ஜூலை 2024 இறுதியில், உண்மையான Placement தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு 45 சதவீத மெட்ராஸ் ஐஐடி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்ற தகவல், எப்போது வெளியானது என்பதை தற்போது பார்க்கலாம்.
அதாவது, கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவர் தீரஜ் சிங், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில தகவல்களை திரட்டியிருந்தார். அந்த தகவல்களின் படி, “சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு, வேலைவாய்ப்பு பெறாமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
2024-ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ள மாணவர்களில், 2 ஆயிரத்து 100 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில், ஆயிரத்து 150 மாணவர்கள், வெற்றிகரமாக முதல் அல்லது இரண்டாம் கட்டங்களில் வேலை பெற்றுவிடுவார்கள். மீதமுள்ள 950 மாணவர்கள், வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருப்பார்கள்” என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தீரஜ் சிங் யூகித்திருப்பதன் அடிப்படையில், 45.2 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று தெரியவந்துள்ளது. என்னதான், இவ்வாறு தகவல்கள் பரவி வந்தாலும், ஐஐடி மெட்ராஸ் இதனை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.