நயன்தாரா நடிப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம். பெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்தை, இயக்குநர் கோபி நயினார் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு, மனுஷி என்ற படத்தை, நடிகை ஆண்டரியாவை வைத்து, இயக்கி முடித்துள்ளார்.
இந்த படமும், விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் கோபி நயினார் மீது, சியாமளா யோகராஜா என்ற 56 வயதான பெண், புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நான் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண். சினிமா மீது ஆர்வம் கொண்ட நான் சில குறும்படங்களை இயக்கியுள்ளேன். விஜய் அமிர்தராஜ் என்ற தயாரிப்பாளர் மூலமாக, கோபி நயினாரின் அறிமுகம் கிடைத்தது.
அவர் என்னிடம், கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்க உள்ளேன், அந்த படத்தை தயாரிக்க முடியுமா என்று கேட்டிருந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த நான், விஜய் அமிர்தராஜிடம் ரு.5 லட்சம் பணத்தையும், கோபி நயினாரிடம் ரூ.25 லட்சம் பணத்தையும் கொடுத்திருந்தேன்.
6 மாதத்தில் படத்தை எடுத்து முடித்துவிடுவதாக கூறிய அவர், இப்போது வரை எடுத்து முடிக்கவில்லை. இதுமட்டுமின்றி, பணத்தை திரும்ப கேட்டால், கொடுக்கவும் மறுக்கிறார்.
எனவே, அவரிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்ப பெற்றுத்தருமாரும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்த புகார் மனுவில், சியாமளா யோகாராஜா கூறியுள்ளார்.