மாண்டஸ் புயல் : 166 குடும்பங்களை சேர்ந்த 578 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 மழை பாதுகாப்பு முகாம்களில், 166 குடும்பங்களை சேர்ந்த 578 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் மழை காரணமாக நாளை 10-12-22 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் தாலுக்காவில் 10 முகாம்களில் 261 பேரும், வாலாஜாபாத் தாலுக்காவில் நான்கு முகாம்களில் 127 பேரும், குன்றத்தூர் தாலுக்காவில் 3 முகாமில் 79 பேரும், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய இரு தாலுக்காவிலும் இரு முகாம்களில் 90 பேரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் வருவாய்த் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.