5-ம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் : மத்திய பிரதேசத்தில் நடந்த அவலம்..!

மத்தியபிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவி இப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதியில் ஒரு மாணவி வைத்திருந்த 400 ரூபாய் காணாமல் போனது. அதை இந்த 5-ம் வகுப்பு மாணவி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்த விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு மாணவியின் முகத்தில் கருப்பு மையைப் பூசி செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்ற வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தந்தை இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பெண் விடுதி காப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.