கடந்த திங்கள்கிழமை அரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலம் நடைபெற்றது. சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊா்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்த தகவல் பரவிய நிலையில் நூ மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான குருகிராமின் சோனா நகரிலும் இரு சமூகத்தினரிடையே கலவரம் மூண்டது.
ஒருவருக்கொருவா் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனா்.
நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் பரவிய வன்முறையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.