சென்னை பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றும்போது மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ள 6 பேரும் கானத்தூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தின் உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.12,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.