மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் அசோக் பவார். இவரது மகன் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளார். இதற்கு தன்னுடைய உறவினர் மோகன் பவாரின் மகன் தான் காரணம் என்று அவர் நினைத்துள்ளார். இதனால், மோகன் பவாரின் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி, ஷ்யாம் பவார், ஷங்கர் பவார், பிரகாஷ் பவார், காந்தாபாய் ஜாதவ் ஆகிய 4 பேரின் உதவியை நாடிய அசோக் பவார், மோகன் பவாரின் குடும்பத்தில் இருந்த 7 பேரையும் கொலை செய்துள்ளார். இதையடுத்து, அந்த 7 சடலங்களையும், புனேவில் உள்ள ஆற்றின் ஓரமாக வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், 7 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகே, உறவினரே முன்பகை காரணமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலையில் தொடர்புடைய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.