கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய நான்கு நீச்சல் வீரர்கள் மற்றும் சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய மூன்று நீச்சல் வீராங்கனைகள் என ஏழு பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் ஏழு பேரும் இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலான பார்க் ஜெலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக முடிவு செய்திருந்தனர். இவர்களுக்கு இந்தியா – இலங்கை இரு நாடுகளும் அனுமதி வழங்கியது.
இதையடுத்து தலைமன்னாரிலிருந்து அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த தொடங்கிய 7 பேரும் நேற்று மாலை 3.45 மணி அளவில் (10 மணி நேரம் 45நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார். நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, மரைன் போலீசார் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்றனர்.