அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, தற்போது அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவிழ்கின்றன. இது பல்வேறு நன்மைகளை செய்த போதிலும், சில தீமைகளையும் நமக்கு அளித்து வருகிறது. குறிப்பாக, செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாவது தான் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
குழந்தைகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரியான பழக்கத்திற்கு அதிகம் அளவில் அடிமை ஆகின்றனர். இவ்வாறு தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால், பார்வை திறன் குறைபாடு, மூளையில் ஏற்படும் பாதிப்பு என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.
இதுமட்டுமின்றி, செல்போன் வெடிப்பு போன்ற விபத்துகளிலும், குழந்தைகள் பலர் உயிரிழக்கின்றனர். இதுமாதிரியான சம்பவம் ஒன்று, தற்போது கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள பட்டிப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார்.
இவரது மனைவி, கூட்டுறவு வங்கியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு, 8 வயதில் ஆதித்யா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில், ஆதித்யா ஸ்ரீ நேற்று இரவு 10.30 மணிக்கு, செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, திடீரென செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.