சென்னையில் உள்ள கலாஷேத்ராவை சேர்ந்த மாணவிகள், அக்கல்லூரியில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகவும், சாதி ரீதியான ஒடுக்குமுறை நடப்பதாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி, இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், தனக்கும் அக்கல்லூரியில் படிக்கும்போது பாலியல் அத்துமீறல் நடந்ததாக, காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர், கைது செய்யப்பட்டார்.
அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகையும், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அபிராமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் இந்த பாலியல் புகார்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “நானும் அந்த கல்லூரியின் மாணவி தான். ஆனால், எனக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் நடந்ததில்லை” என்று பதில் அளித்தார்.
மேலும், “ஒரு தரப்பு செய்திகளை மட்டுமே கேட்டுவிட்டு, கலாஷேத்ரா குறித்து பலரும் அவதூறு பரப்புகிறார்கள். கலாஷேத்ரா என்ற வார்த்தையை கூட சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், அவதூறாக பேசுகிறார்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அபிராமி, “அந்த ஆசிரியருக்கு குடும்பம் உள்ளது. அவருக்கு மகள், மனைவி ஆகியோர் உள்ளனர். எனவே, அவர் தரப்பு நியாயத்தை யாரும் கேட்கவில்லை. என்ன நடந்தது என்று அந்த ஆசிரியரிடம் யாரும் கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல், புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக, இந்த நடிகை பேசியிருப்பது, நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.