ரன், ஆனந்தம், அஞ்சான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளவர் இயக்குநர் லிங்குசாமி. இவர், எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்கு, பி.வி.பி. கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.35 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தார்.
இந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக, காசோலை ஒன்றை அந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். ஆனால், வங்கியில் செலுத்தப்பட்ட அந்த காசோலை, திரும்ப வந்துள்ளது. இதனால், அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், பி.வி.பி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய மொத்த தொகையையும் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், லிங்குசாமி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், லிங்குசாமிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு செல்லும் என்றும் கூறியிருந்தார். இதனால், அவர் 6 மாதம் சிறை செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த உத்தரவையும் எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வாரா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.