மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா, ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்து 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
இதற்காக, இயக்குநர் சீனு ராமசாமிக்கு, ரஷ்யன் மையம் சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ரஷ்யா நாட்டில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட இருப்பது, எனக்கு பெருமையாக உள்ளது. நான் சினிமாவிற்கு வந்த நோக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாமனிதன் திரைப்படம் ஓடிடியில் வெளியானபோது, வெறும் 20 சதவீத பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. ஆனால், ஆஹா ஓடிடியில் வெளியான பிறகு, ரூபாய் 50 கோடிக்கு மேல், அந்த படம் வசூலித்துள்ளது. பொது ஊடகத்தால் வெற்றி பெற முடியாத படம் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது.” என்று பெருமையுடன் தெரிவித்தார்.
“விஜய் சேதுபதியுடன் இணையும் வாய்ப்பு இனி கிடையாது. 12 ஆண்டு காலத்தில் நான்கு படங்களை விஜய் சேதுபதியுடன் சேர்ந்து இயக்கியுள்ளேன். நான் இறந்தாலும் இந்த படங்கள் பேசும்” என்று தெரிவித்தார். கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி.
இந்த படத்திற்கு பிறகு, இதுவரை 6 படங்களை அவர் இயக்கியுள்ளார். இதில், தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்ம துரை, மாமனிதன் ஆகிய நான்கு படங்களில் விஜய்சேதுபதி தான் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.