பத்திரிக்கையாளராக தனது பயணத்தை தொடங்கிய விக்ரமன், அதன்பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியில், இணை செய்தித் தொடர்பாளராக மாறினார். கட்சி பணிகளை செய்து வந்த அவருக்கு, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும், கடந்த சீசனில் கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, முற்போக்குத் தனமான கருத்துக்களை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்து, பிரபலம் அடைந்தார். இந்நிலையில், விக்ரமன் தன்னை சாதிய ரீதியாக ஒடுக்கியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள கிருபா முனுசாமி என்ற பெண், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய விக்ரமன், பணம் பறித்ததாகவும், சாதி பெயரை சொல்லி திட்டி, வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வேசி உள்ளிட்ட ஆபாச வார்த்தைகளை கூறி, மனதளவில் காயத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
எனவே விக்ரமனை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், விக்ரமன் குறித்து காவல்துறையில் நான் புகார் அளிக்க உள்ளேன் என்றும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதனை அறிந்த விக்ரமனின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண் வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்கு, விக்ரமன் தரப்பில் இருந்து எந்தவித மறுப்புச் செய்தியும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
