கடவுளை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு மதத்திலும் பித்தலாட்டங்களும், மூட நம்பிக்கைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை மக்கள் பகுப்பாய்வு செய்து, எது சரி? எது தவறு? எதனை செய்யலாம்? எதனை செய்யக்கூடாது? என்று அறிந்து செயல்பட வேண்டும்.
இந்நிலையில், கென்யா நாட்டில் பாதிரியார் ஒருவரின் முட்டாள்தனமான பேச்சைக் கேட்டு, 21 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கென்யாவில் உள்ள மாலின்டி பகுதியில் வசித்து வருபவர் பால் மெகன்ஸி. குறிப்பிட்ட மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியராக இவர் செயல்பட்டு வருகிறார்.
இவரது தோட்டத்தில் 15-க்கும் மேற்பட்டோர், உயிருக்கு போராடி வரும் சூழ்நிலையில் கிடப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இருந்த அனைவரும் உடல் மெலிந்து மிகவும் பரிதாபத்துடன் காணப்பட்டனர்.
அவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில், பட்டினியோடு இருந்தால், கடவுளை சந்திக்க முடியும் என்று பாதிரியார் கூறியது தெரியவந்தது. இதையடுத்து, பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே, அவருடைய தோட்டத்தின் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அங்கு தீவிர சோதனை நடத்தினர்.
அதில், அவரது தோட்டத்தின் அடியில் 21-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைந்து கிடப்பதை கண்டு, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மூட நம்பிக்கையில் மூழ்கி, தான் அழிவது மட்டுமின்றி, அப்பாவியான பொதுமக்களை பாதிரியார் கொலை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.