நடிகர் அஜித்தின் பிறந்த நாள், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், AK 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களை மகிழ்வித்தது. விடாமுயற்சி என்று வைக்கப்பட்டிருந்த இந்த டைட்டில் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், விஜயின் ரசிகர்கள், இந்த டைட்டிலை மீம்ஸ் வெளியிட்டு விமர்சித்து வந்தனர். இந்நிலையில், அஜித் ரசிகர்கள் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது, 2016 -ஆம் ஆண்டு வரை, தமிழில் டைட்டில் வைத்தால், திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் சட்டம் இருந்தது.
அதுவரை, அனைத்து நடிகர்களும், தமிழிலேயே பெயர் வைத்து வந்தனர். ஆனால், அந்த சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, பல்வேறு நடிகர்கள் தங்களது படங்களின் பெயரை ஆங்கிலத்தில் வைக்க ஆரம்பித்தனர். இருப்பினும், தன்னுடைய படங்களுக்கு, எப்போதும் தமிழில் மட்டுமே அஜித் பெயர் வைத்து வந்தார்.
இது அவரது தமிழ் பற்றை காட்டுகிறது என்றும், வரி விலக்கு இருந்த போது மட்டும் தமிழில் வைத்துவிட்டு, இப்போது ஆங்கிலத்தில் சிலர் டைட்டில் வைக்கிறார்கள் என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், விடாமுயற்சி என்ற டைட்டிலை, தமிழில் ட்வீட் செய்து, ட்விட்டர் தளத்திலும், டிரெண்ட் செய்து வருகின்றனர். மாஸ்டர், லியோ, பீஸ்ட் ஆகிய விஜய் படங்களுக்கு, தொடர்ச்சியாக ஆங்கிலத்திலேயே டைட்டில் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.