பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருவது வரதட்சனை. இந்த வரதட்சனை பிரச்சனையால், பல திருமணங்கள், கடைசி நேரத்தில் நின்ற கதையை கூட கேட்டிருப்போம்.
தற்கொலை, கொலை போன்ற சம்பவங்களும் கூட, இந்த வரதட்சனையால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு, சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த வரதட்சனை கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு, தெலங்கானா அரசு, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது, பள்ளி பருவம் முடிந்து, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடம், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக, அவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டும்.
“நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் வரதட்சனை வாங்க மாட்டேன்.. அப்படி நான் வரதட்சனை வாங்குவது தொடர்பாக, புகார் ஏதேனும் வந்தால், என்னுடைய கல்லூரி சான்றிதழை தடை செய்யலாம்” என்று உறுதிமொழி வாங்குவதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் இந்த நடவடிக்கைக்கு, அம்மாநில மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.