உலோகங்களின் மதிப்பை கண்டறிவதற்கு, Hallmark என்ற முத்திரை வழங்கப்படுவது வழக்கம். பொதுவாக உயர்தர உலோகங்களுக்கு தான், இந்த மதிப்பு வழங்கப்படுகிறது. அதாவது, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உயர் ரக உலோகங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆல்மார்க் முத்திரையை, புதிததாக உருவாக்கும் தங்க நகைகளில் இட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், அது பழைய நகைகளுக்கு பொருந்தாது என்று பொதுமக்கள் அனைவரும் நினைத்திருந்தனர். ஒரு சிலர், பழைய நகைகளுக்கும் இது பொருந்தும் என்று கூறி வந்தனர்.
இதனால், பழைய நகை விற்பதிலும், வாங்குவதிலும், சில குழப்பங்கள் இருந்து வந்தன. இந்நிலையில், மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அந்த குழப்பங்களை நீக்கியுள்ளது.
அதாவது, வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளுக்கும் ஹால்மார்க் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஹால்மார்க் பதிவு செய்யப்படாத பழைய நகைகளை மாற்றவோ, விற்பனை செய்யவோ முடியாது என்றும் மத்திய அரசு புதிதாக நிபந்தனை விதித்துள்ளது.
பழைய நகைகளை ஹால்மார்க் செய்வதற்கு BIS பதிவு செய்யப்பட்ட நகை கடைக்காரரிடம் இருந்து பெறலாம் என்றும் ஹால்மார்க் பெறுவதற்கு ஒவ்வொரு நகைக்கும், 45 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வீட்டில் வைத்திருக்கும் பழைய நகைகளை நீங்கள் வெறுமனே பயன்படுத்துவதாக மட்டுமே இருந்தால் ஹால்மார்க் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அதை விற்க வேண்டும் அல்லது அதை உருக்கி வேறு விதமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.