சாதி ரீதியான மோதல்கள், ஒடுக்குமுறைகள், வசைப்பாடுதல் போன்ற சம்பவங்கள், அவ்வப்போது நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு, வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் போன்ற கடுமையான சட்ட ஆயுதங்கள் இருந்தபோதிலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.
சமீபத்தில் கூட, வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தேக்கத் தொட்டியில், மலம் கலந்த, மனிதத் தன்மை அற்ற சம்பவம் ஒன்று நடந்தது. இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, சின்னத்தாயி, கிழக்கு சீமையிலே, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, உன்னைத் தாலாட்ட வருவாளா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் விக்னேஷ்.
இந்த படங்களுக்கு பிறகு, வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், சினிமாவில் இருந்து விலகி, வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு, இவரை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், நடிகர் விக்னேஷ். பல படங்களில் நாயகனாக, துணைப்பாத்திரங்களாக நடித்தவர். இப்போது எந்த படங்களும் இல்லாததால் ஏதோ வணிகம் செய்கிறார் போல. எவ்வளவு சாதி வெறியோடு பேசுகிறார் பாருங்கள்.” என்று கூறி, தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்திருந்தார்.
இதுமட்டுமின்றி, விக்னேஷ் பேசியதாக கூறப்படும், ஆடியோ ஒன்றையும், அவர் அந்த பதிவில், இணைத்திருந்தார். அந்த ஆடியோவில், வியாபாரம் தொடர்பாக இளைஞர் ஒருவரிடம் பேசும் விக்னேஷ், அவரது சாதிப் பெயரைச் சொல்லி, கடுமையாக திட்டியிருக்கிறார். இந்த ஆடியோ, இணையத்தில் வைரலாகி, பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது.