சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அதிக அளவில் போக்குவரத்து இடையூறாகவும் பேருந்துகள் நிறுத்த முடியாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை கருத்தில் கொண்டு பழைய பேருந்து நிலையத்தை ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்ற முடிவு செய்து கடந்த 2018 டிசம்பர் மாதம் 92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. தற்பொழுது கூடுதலாக மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 96.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.
இந்த ஈரடுக்கு பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஒரே நேரத்தில் 80க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் சேலம் மாநகருக்குள் செல்லும் ஜங்ஷன் அடிவாரம், கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இரண்டாம் தளத்தில் சேலம் மாநகரை சுற்றியுள்ள ஓமலூர், தாரமங்கலம், வாழப்பாடி, மல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் கீழ் தரைப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் பேருந்து நிலையத்தின் மேல் பகுதியில் ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட் எனப்படும் திறந்த வெளி உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் காத்திருப்பதற்காக குளிரூட்டும் காத்திருப்பு அறையும் லிஃப்ட் வசதியும் உள்ளது. அதிநவீன கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் உள்ளது.
இத்தனை வசதிகளை கொண்ட ஈரடுக்கு மேம்பாலம் வருகின்ற பதினொன்றாம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்.