ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இந்த சட்டவிரோத செயலுக்கு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியே உடந்தையாக இருப்பதாகவும், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் வாகனங்களை, காவல்துறையினர் பரிசோதனை செய்து வந்தனர்.
அப்போது, குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் முருக செல்வம் சென்ற வாகனத்தையும், காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். அந்த வாகனத்தில், கணக்கில் வராத, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்து, பணம் தொடர்பாக முருக செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அரிசி ஆலை அதிபர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணம் தான் இது என்பது தெரியவந்துள்ளது.