ராமாயணம் படித்தால், பிரசவம் எளிதாக நடக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், அலுவலக கூட்டரங்களில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கர்ப்பிணிப் பெண்கள் ராமாயணம் படித்தால், பிரசவம் எளிதாக நடக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கீதா ஜீவன், இது கேட்பதற்கே வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில், உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 89 காப்பகங்களை, தமிழக அரசு மூடியுள்ளது என்று தெரிவித்தார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, காவல்துறை விரைந்து செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.