பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஊழல் குற்றச்சாட்டுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றது குறித்தும் பேசியிருந்தார். இது அதிமுக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மோதிக் கொள்ளும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வரை பாஜக – அதிமுக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், “ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டாதே, அம்மா பற்றி பேச உனக்கு தகுதி உண்டா?, அண்ணாமலையே நாவை அடக்கு” என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த போஸ்டரால் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.