தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா கைது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு காவல் நிலையமாக தேடி தேடி பாஜகவினர் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது. மு க ஸ்டாலின் திமுக அரசு காவல்துறையை உபயோகித்து பாஜகவினரை வேண்டுமென்றே திட்டமிட்டு மிரட்டி பார்க்கிறது. இந்த மிரட்டலுக்கு அஞ்சுவது பாஜக அஞ்சுவது கிடையாது.
செந்தில் பாலாஜி பல லட்சம் கொள்ளை அடித்தவர். ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சாக ஸ்டாலின் பேசி வருகிறார்.
பாஜக தொண்டர்களையோ நிர்வாகிகளையோ அடக்க நினைப்பது கைது செய்வது என்பது போன்ற நடவடிக்கைகளை ஈடுபட்டால் பாஜக யார் என்று திமுகவினருக்கு உணர்த்த நேரிடும் என தெரிவித்தார்.
கைது செய்திருக்கக்கூடிய அனைத்து பாஜகவினரையும் விடுதலை செய்ய வேண்டும். அடிமட்ட தொண்டர்களுக்கு ஆதரவாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்த எஸ் ஜி சூர்யா அவர்களையும் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பாஜகவினரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறினார்.
பாஜக வினர் மீது தேவையற்ற வழக்குகளை பதிந்து இருக்கின்றனர். கைது செய்துள்ள அத்தனையும் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை 100 பாஜகவினரை கைது செய்து உள்ளதாகவும் கூறினார்.