குஜராத்தின் ஜுனாகத் நகரில் மஜேவாடி கேட் என்ற பகுதியில் ஹஸ்ரத் ரோஷன் ஷா பிர் பாபா தர்கா என்ற மத வழிபாட்டுத் தலம் உள்ளது. இந்த தர்கா ஆக்கிரமிப்பு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் தர்காவில் ஒட்டப்பட்டது. 5 நாள்களுக்குள் தர்கா கட்டுமானம் தொடர்பான ஆவணங்கள் அனுப்ப வேண்டும் அல்லது சட்டவிரோதமாக கட்டப்பட்ட தர்கா அங்கிருந்து இடித்து அகற்றப்படும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று இரவு நூற்றுக்கணக்கானோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறியதால் கற்கள் வீசப்பட்டு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து வன்முறையாளர்களை விரட்டி அடித்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.