சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தினர். இதனால், தங்களது இயல்பு வாழ்க்கையை கூட நடத்த முடியாமல், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோன்று, ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் எபோலா என்ற மிகவும் கொடிய வைரஸ் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் அதிபர் யோவேரி முசெவேனி பேசும்போது, அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், விரைவில் நாம் எபோலா வைரசை கடப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
எபோலா என்ற நதிக்கரையில் இருந்த குக்கிராமத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த பெயர் வந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட இந்த வைரசிற்கு, ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.